Sunday, February 8, 2009

முதல் (சிறு)கதை

சொட். சொட்.. சொட்... அது ஒரு மழைக்காலம்.

தூறல் வானத்தில் இருந்து மட்டுமல்ல, என் கண்களிலும்தான். இந்த பச்சை புல்வெளியில் கால் பதித்து நடக்கும் வேளையில் என் நெஞ்சில் முகம் பதித்து நிற்கின்ற என்னவளின் நினைவுகள். நடக்கின்ற வழியெல்லாம் ஒரு உணர்வு. இந்த உணர்வு அனுதினமும் இருப்பதால், வழியெல்லாம் இருந்த வலி இப்பொழுது தன் முகத்தை ஒரு சுகமாக காட்டுகிறது. இந்த வலி என்றுமே நீங்குவதில்லை. நீங்கவும் விரும்பவில்லை.

என் கனவில் அவள் வந்த பொழுது எல்லாம் நான் விழி திறக்க அஞ்சினேன். என் நினைவில் அவள் நிறைந்திருக்க விழி மூட அஞ்சுகிறேன். "எனக்கு நினைவு தெரிந்து" என்று எல்லாரும் சில செய்திகளை பற்றி விவாதிக்கும் பொழுது, எனக்கு நினைவென்று ஒன்று இருப்பதே அவள் அழகு கொஞ்சும் முகம்தான் என்று கத்த தோன்றும்.

அவளை நான் சந்தித்தது ஒரு விபத்தில்தான், யாரும் இறக்கவில்லை மாறக காதல்தான் பிறந்தது. "காதல்", வார்த்தையில் சுகம் இருந்தாலும் வாழ்வில் அது ஒரு வலிதான். அன்று என் சிநேகிதனுடன் வேலை தேடி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொழுதுதான், "ச்ச்ரர்க்க்" என சத்தம், அதற்குள் வெல்லத்தை சுற்றி இருக்கும் எறும்புகள் போல ஒரு கூட்டம், என்ன என்று சென்று பார்த்தால், ஒரு இளம்பெண் தன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருந்தாள். வெல்லத்தை சுற்றி எறும்புகள், சரிதான். கடவுள் ஒரு உழைப்பாளி என்பது அவள் அழகில் தெரிந்தது. அவளை முழுதும் வர்ணித்து முடிப்பதற்குள் எழுந்து சென்று விட்டாள். கூடவே என் மனதும்.

கண்டதும் காதல். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை இந்த நொடிக்கு முன் வரை.இது காதல்தான் என என் உள் மனது உரக்க கூறினாலும் அதை என் அறிவு ஏற்று கொள்ள மறுத்தது. அந்த இரவு நீண்ட பொழுதாக தொடர்ந்தது, என்னால் அவளை பற்றிய சிந்தனையில் இருந்து மீள முடியவில்லை. பழகாமல் பார்த்து மட்டும் வந்ததால் இது இனக்கவர்ச்சி மட்டுமேயென அறிவு தீர்மானித்தது.

அறிவுக்கும், மனத்துக்குமான வாக்குவாதம் முடிந்து நான் தூங்குவதுற்குள், சூரியன் அவளை பார்க்க அவசரமாக வந்து விட்டான். வேறு வழியின்றி அவள் வியாப்பித்திருக்கும் கண்களை கசக்கி கொண்டு, இன்று போக வேண்டிய நேர்காணலுக்கு என்னை தயார்படுத்தி கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். நேற்று அவளை இங்கேதான் பார்த்தேன். இன்றும் அவள் வருவாளா, நேற்று எந்த பக்கம் இருந்து வந்தாள் என மனம் வினா தொடுத்த படி இருந்தது. கேள்விகளுக்கு பதில் இல்லையெனினும், என் செயலை கண்டு அறிவு மனதுடன் கைகோர்த்து கொண்டது. பேருந்தும் வந்து சேர்ந்தது.


பேருந்தில் ஏற்படும் அனுபவங்களுக்கு அளவில்லை. சில் சமயங்களில், இவர் அடுத்து வரும் நிறுத்தங்களில் எழுந்து விடுவார், நாம் அந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம் என நினைத்தால், அவர் நாம் இறங்க வேண்டிய நிறுத்தத்தையும் கடந்து சென்று கொண்டிருப்பார். இன்றும் இப்படி ஏதாவது நடந்து விடுமோ என எண்ணிக்கொண்டு ஏறினால், ஒரு இருக்கை இருந்தது. அதில் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டேன் (இன்னுமும் ஜன்னலுக்காக சண்டை போடுவதுண்டு). வழியெங்கும் "என்னவள்" போன்ற மாயை (அறிவும், மனதும் ஏற்று கொண்டதால் அவள் என்னவள் ஆகிவிட்டாள்).

அடுத்த நிறுத்தத்தில், என் பக்கத்தில் யாரோ ஒருவர் உட்காருவது தெரிந்தது. திரும்பிய பொழுது, அவள், அவளேதான். என்னருகில் என்னவள். இது என்ன கனவா? நேற்றுத்தான் பார்த்தோம், திரை படங்களில் சொல்வது போல் விட்ட குறை, தொட்ட குறையா?. சரி, பழமொழியை போல்தான், ஆராயாமல் அனுபவிக்க வேண்டும்.. உங்கள் பெயர்? எந்த ஊர்? இந்த பேருந்து அரண்மனை நிறுத்தம் வழி செல்லுமா? இப்படி ஏதாவது... என்னிடத்தில் ஏதாவது பேச வேண்டும். ஒன்றும் நடக்கவில்லை. வீட்டில் அனைவரும் என்னை வாயாடிப்பயல் என கேலி செய்வர். இன்று ஒரு வாய் பேச இயலாதவரை போல் அல்லோல படுகிறேன்.

பேருந்து வழக்கம் போல் இல்லாமல் மிக வேகமாக செல்வதாக மனது குற்ற பத்திரிக்கை வாசித்து. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. "கொஞ்சம் விலகி கொள்ளுங்கள், நான் இறங்க வேண்டும்." என இப்பொழுதாவது ஒரு வார்த்தையை அவளுக்கு கொடுத்து விடலாம் என நினைத்து கொண்டிருக்கும் பொழுது அவளும் இருக்கையை விட்டு எழுந்து விட்டாள். எழுந்து சென்றே விட்டாள். நான் அவளை தொடர ஆரம்பித்தேன். 'டேய்...' என வந்தான் என் உயிர் நண்பன், உயிரை எடுப்பதற்காக. அவனை தவிர்த்து செல்வதற்குள் அவளை தொலைத்துவிட்டேன்.

அறிவு தன் அவதாரத்தை எடுத்து வேலை தேடி வந்ததை நினைவூட்ட, உயிர் நண்பனுடன் நேர்காணலுக்கு சென்றேன். மனிதக்கடலில் முக்குளித்து எனது நேர்காணலுக்கான முன்பதிவை முடித்து, என்னுடைய முறை வரும் நேரத்தை குறித்து கொண்டேன். காத்திருந்தேன். "நம்ம முறை வர இன்னும் நேரம் இருக்கு, வா தேனிர் அருந்தி வரலாம்", இது நண்பன். சரி வெளிய சென்றால், அவளை பார்க்க ஒரு வாய்ப்பாக அமையலாம் என கிளம்பி சென்றேன். அந்த கடையின் விளம்பர பலகையில் "Made for each other" என எழுதி இருந்தது. எனக்கே ஒரு ஆச்சரியம். இதே போல் விளம்பர பலகைகளை பார்த்தபொழுது ஏற்படாத பரவசம் இன்று மட்டும் ஏன். மனதும், அறிவும் கை தட்டி கொண்டது.

நேர்காணலில் என் முறை வந்தது. நன்றாக பதிலளித்து மன நிறைவுடன் வந்தேன்.நேர்காணல் முடிவை இன்னும் அரை மணி நேரத்தில் அறிவிப்பதாக சொன்னார்கள். காதல் வந்ததும் முதல் எதிரி இந்த காலமும், நேரமும்தான். அவள் இல்லாமல் வீணாகும் மணித்துளிகள் என்னை பார்த்து ஏளனம் செய்து கடந்தன. அப்பொழுதுதான் அவளை பார்த்தேன். சிறிது தொலைவில், கண்கள் பட படக்க, கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள். அவளும் இதே நேர்காணலுக்காக வந்திருக்கிறாள் என்று எனக்குள் மகிழ்ச்சி கரை புரண்டோடியது,

முடிவுகள் அறிவிக்கபட்டவுடன், அறிவிப்பு பலகை அருகே சென்று பட்டியலில் அவள் பெயரை தேடி கொண்டிருந்தாள். நானும் சேர்ந்து கொண்டேன், அவள் பெயரை தெரிந்து கொள்வதற்க்காக. அவள் ஒரு பெயரை தொட்டு கடவுளுக்கு நன்றி சொன்னாள். அவள் தொட்ட இடத்தில் இருந்த மந்திரம் "ஜெய்". அழகுக்கு இன்னொரு பெயர். இன்று முதல் ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதென முடிவு செய்து கொண்டேன். பட்டியலில் என் பெயரும் இருந்தது, நான் மகிழ்வதை உணர்ந்து, ஒரு புன்னகை பூத்து விட்டு அவள் கிளம்ப எத்தனித்த தருணத்தில், "வாழ்த்துக்கள்!!!" என கூறினேன். மனம் மடை திறந்து விட்டது, அறிவு வழி விட்டது. அவள் திரும்பி எனக்கும் பதில் வாழ்த்துக்கள் தெரிவித்தாள். பெயர் பரிமாற்றம் நடந்தது. அவள் தினமும் நான் வரும் பேருந்தில்தான் வருவாள் என்ற தகவலையும் (வரத்தையும்) பெற்று கொண்டேன்.

அடுத்த வாரத்தில் அலுவலகத்தில் சேர்ந்து விட அறிவுறித்தி இருந்தார்கள். ஒரு நிமிடம் கடப்பதே சுமையாக இருந்தது. ஏழு நாட்கள், ஏழு யுகங்களாக கடந்தது. அலுவலக நேரம் காலை 8:30. நான் சூரியனுக்கும் முன் எழுந்து அவள் வரும் பேருந்தை விட்டு விட கூடாதென 7:00 மணிக்கெல்லாம் அவளுடைய பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டேன். காலை மணி 8:00, அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். எனக்கு பொழுது புலர்ந்து விட்டது. நடக்கிறாள் என்பதை விட மிதந்து வருகிறாள் என்பதுதான் பொருத்தம். அவள் பேருந்தினுள் நுழைந்தபின், நானும் சேர்ந்து கொண்டேன். அவள் பார்வை விழும் தூரத்தில் இருந்து அவளை கவனிக்காதவன் போல நின்று கொண்டிருந்தேன்.

அவள் என்னை அழைத்தாள். என் பெயர் எனக்கு மிகவும் பிடித்தது. அவளருகே நெருங்கி நின்றேன், "நீங்க இங்கே உட்காரலாமே", அவள். "இது என் பிறவி புண்ணியம்", என் மனது, "டேய்!!!", என் அறிவு. வார்த்தையே இல்லாமல் அமர்ந்தேன்.பொதுவான செய்திகள் பற்றி அளவளாவி கொண்டோம். அவள் வெளியே வேடிக்கை பார்க்கும் சமயத்தில் என் கண்கள் அவளது காது வலயங்களில் தொங்கி கொண்டிருந்தன. அவள் திரும்பியவுடன் எம்பி குதித்து வருவதை, அவளும் கவனிக்க தவறவில்லை..சிறிது நேரத்தில், அலுவலகம் வந்து சேர்ந்து விட்டது. "ஏன் இவ்வளவு வேகம்?" என நான் ஓட்டுனரிடம் கேட்டதை சிலர் முறைத்து பார்த்தனர்.

இப்படியே ஒரு மாதம் போனதில், அவளுக்காக நான் அவளுக்கு தெரிந்தே காத்திருக்கும் அளவிற்கு இருவருக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. அடுத்த மாதத்தில் எனக்கு அலுவலக வேலையாக வெளிநாடு செல்ல அழைப்பு விடுத்திருந்தார்கள்.செல்ல மறுத்தும், போவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகி விட்டது. அலுவல் முடிந்து வீடு திரும்புகையில்,
அவள் என்னிடம் கேட்டாள்,

அவள்: உனக்கு ஏன் வெளிநாடு போக விருப்பம் இல்ல.
நா: காரணம் பெரிதா ஒன்னும் இல்ல. ஆனாலும் போக விருப்பம் இல்ல.
அவள்: எனக்கு தெரியும்.
நா: (திகைப்புடன்) என்ன?
அவள்: அது உனக்கும் தெரியும். அத பத்தி பேசி முடிவெடுக்க வேண்டிய நேரத்துக்கு வந்துட்டோம்னு நினைக்கிறன்.
நீதானே இதை ஆரம்பித்தவன். நீயே பேச்சையும் ஆரம்பி.
நா: (உண்மையில் என் காதலை பத்திதான் பேசுகிறாளா இல்லை என்ற குழப்பத்துடன், சரி என் காதலை நான்
வெளிபடுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் என்ற நம்பிக்கை வந்து) இந்த ஒரு மாதமா நம்ம ரெண்டு
பேருக்கும் இடையில் இருக்கும் இந்த உறவு என்றும் தொடரணும்னு நினைக்கிறேன்.
அவள்: கண்டிப்பா. நான் கடைசி வரைக்கும் உன் தோழியா இருப்பேன்.
நா: இல்லை, இல்லை, நான் சொல்ல வந்தது, வேற .. .. ..
அவள்: வேறன்ன?
நா: உறவுன்னு நான் சொல்ல வந்தது, இப்போ இருக்கிற மாதிரி நல்ல புரிந்துணர்வோட வாழ்க்கையையும்...
அவள்: புரியல.
நா: (வேணும்னே கேட்கிறாளோ...) சரி நானே சொல்லிடுறேன். என் வாழ்கையை உன் கூட பகிர்ந்துக்கனும்னு
விரும்புறேன். நீ என் மனம் முழுதும் நிறைந்திருக்க நீ ஏன் வாழ்க்கையிலும் நிறைந்திருக்கனும்னு
உன்னை கேட்கிறேன். உனக்கு சம்மதம்மா.
அவள்: போதுமா. இல்லை இன்னும் வச்சிருக்கியா. உன்னுடைய நடவெடிக்கைகளில் இருந்தே நான் புரிந்து கொண்டேன்.
முன்னமே சொல்லுவன்னு எதிர்பார்த்தேன்.என் பதிலை இப்போவே சொல்லனுமா இல்லை...
நா: நாளைக்கு கூட சொல்லலாம்.
அவள்: அவ்வளவு அவசரப்பட்டால் ஆகாது. நீ முதலில் வெளிநாடு சென்று வா. இதை பத்தி அப்போ பேசிக்கலாம்.

பல சமாதானங்களுடன் என்னை வழி அனுப்பி வைத்தாள். இன்று நான் வெளிநாட்டில் அவளை பற்றிய கனவுகளோடு ஊருக்கு திரும்பி செல்லும் நாட்களை எண்ணி கொண்டிருக்கிறேன்.

இவண்.


4 comments:

 1. nice bossu....nalla irruku....
  all the best...

  ReplyDelete
 2. Kadhai(Kaadhalum) muttrumena yedhirpaarthaen aanaal oru sirandha rasanaiyodu thodarndhatharku ezhuthaalarukku oru salute ! !

  -

  ReplyDelete
 3. idhu kadhaya illai kavidhaya???

  ReplyDelete